ரூ.12 கோடி வாடகை பாக்கி திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் கடை, வீடுகளுக்கு ‘சீல்’
ரூ.12 கோடி வாடகை பாக்கி செலுத்தாததால் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்கு சொந்தமான கடை மற்றும் வீடுகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜ சாமி கோவிலுக்கு சொந்தமாக 249 இடங்களில் கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன. இதில் அனைவரும் அடிமனை வாடகைதாரர்களாக உள்ளனர். இவ்வாறு வாடகை தாரர்களாக உள்ளவர்கள், அறநிலையத்துறை சார்பில் நிர்ணயிக்கப்பட்ட வாடகையை மாதந்தோறும் செலுத்தவேண்டும்.
இந்தநிலையில் வடிவுடையம்மன் கோவில் நிலத்தில் வீடு மற்றும் கடை வைத்திருக்கும் பலர் பல ஆண்டுகளாக வாடகை கட்டவில்லை. இவர்கள் உடனடியாக நிலுவைத் தொகையாக உள்ள வாடகை பணம் ரூ.12 கோடியை செலுத்த வேண்டுமென்று அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
அதிகாரிகள் ‘சீல்’ வைப்பு
ஆனாலும் தொடர்ந்து அடிமனை வாடகை செலுத்தவில்லை. இது தொடர்பாக அறிவிப்பு கொடுத்தும் வாடகை செலுத்தாத வீடு மற்றும் கடைகளுக்கு கோர்ட்டு உத்தரவுப்படி அறநிலையத்துறை சென்னை இணை ஆணையர் ‘சீல்’ வைக்க முடிவு செய்தார்.
இதையடுத்து அறநிலையத்துறை சென்னை உதவி கமிஷனர் கவெனிதா, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் உதவி கமிஷனர் சித்ராதேவி மற்றும் ஊழியர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் சுற்றுப்பகுதியில் உள்ள அடிமனை வாடகை செலுத்தாத கடை மற்றும் வீடுகளுக்கு நேற்று காலை ‘சீல்’ வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இடித்து அகற்றம்
அதன்படி திருவொற்றியூர் சன்னதி தெரு, நந்தி ஓடைகுப்பம், காலடிப்பேட்டை, மசூதி தெரு, ஈசானிமூர்த்தி கோவில் தெருக்களில் உள்ள 5 வீடுகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தள்ளப்பட்டது. அதேபோன்று 2 கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வாடகை பாக்கி ரூ.11 லட்சத்து 83 ஆயிரத்து 399 வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறும்போது, “அடிமனை வாடகைதாரர்கள் சுமார் ரூ.12 கோடி அளவுக்கு வாடகை பாக்கி வைத்துள்ளனர். இவர்களிடம் இருந்து வாடகை வசூல் செய்ய தற்போது நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். வாடகை செலுத்த முன் வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது” என்றனர்.
Related Tags :
Next Story