சின்னசேலம் அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு
சின்னசேலம் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 8 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சின்னசேலம்,
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சின்னசேலம் அருகே உள்ள ஈசாந்தை கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசு(வயது 52). இவர் சின்னசேலம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அன்பரசு நேற்று முன்தினம் இரவு காற்றோட்டத்துக்காக வீட்டுக் கதவை திறந்து வைத்து விட்டு தனது மனைவி வெண்ணிலாவுடன்(46) வீட்டு வராண்டாவில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இரவு 11.30 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் 3 பேர், தூங்கிக் கொண்டிருந்த வெண்ணிலாவின் கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றனர். இதனால் திடுக்கிட்டு எழுந்த வெண்ணிலா திருடன்... திருடன்... என கூச்சலிட்டார்.
இதைக்கேட்டு எழுந்த அன்பரசு தப்பி ஓடிய மர்மநபர்களை பிடிக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் அன்பரசுவை உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் அன்பரசுவின் தலை, கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மர்மநபர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த அன்பரசுவை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story