ரூ.22 கோடி செலவில் பல்லாவரம் பெரிய ஏரி, கீழ்கட்டளை ஏரி புனரமைப்பு பணிகள் அடுத்த மாதம் தொடங்குகிறது


ரூ.22 கோடி செலவில் பல்லாவரம் பெரிய ஏரி, கீழ்கட்டளை ஏரி புனரமைப்பு பணிகள் அடுத்த மாதம் தொடங்குகிறது
x
தினத்தந்தி 29 March 2018 4:39 AM IST (Updated: 29 March 2018 4:39 AM IST)
t-max-icont-min-icon

பல்லாவரம் பெரிய ஏரி மற்றும் கீழ்கட்டளை ஏரியில் ரூ.22 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் நடைபெற உள்ளன.

தாம்பரம்,

சென்னையை அடுத்த பல்லாவரம் நகராட்சி குரோம்பேட்டை பகுதியில் பல்லாவரம் பெரிய ஏரி உள்ளது. 127 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் மழை காலங்களில் தண்ணீர் நிறைந்து காணப்படும்.

ஒரு காலத்தில் இந்த ஏரியின் பாசனத்தை நம்பி விவசாயம் நடைபெற்று வந்தது. பின்னர் காலப்போக்கில் விவசாய நிலங்கள் குடியிருப்புபகுதிகளாக மாற்றப்பட்டதும் இந்த ஏரியின் பயன்பாடு குறைந்தது. இதனால் பொதுப்பணிதுறை ஏரியை முறையாக பராமரிக்காமல் விட்டு விட்டது.

அதன் பின்னர் அந்த ஏரி ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. ஆக்கிரமிப்புகளை தடுக்காத வருவாய் துறை, ஆக்கிரமிப்புகளுக்கு சாலை அமைத்து கொடுத்த நகராட்சி, மின்சாரவசதி ஏற்படுத்தி கொடுத்த மின்வாரியம் என அனைத்து அரசு துறைகளின் ஒத்துழைப்புடன் ஏரி ஆக்கிரமிக்கப்பட்டு, தற்போது ஏரியின் அளவு 68 ஏக்கராக சுருங்கிவிட்டது.

பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் செல்லும் ரேடியல் சாலை அமைக்கப்பட்டபோது இந்த ஏரி இரண்டாக பிரிக்கப்பட்டதால் ஏரியின் நிலைமை மேலும் மோசமானது. பல்லாவரம் பெரிய ஏரியின் குரோம்பேட்டை பகுதியில் பல்லாவரம் நகராட்சி குப்பைகளை கொட்டி ஏரியின் ஒரு பகுதியை குப்பை மேடாக மாற்றியதால், கடுமையான சுற்றுசூழல் கேடு ஏற்பட்டது.

‘பயோ மைனிங்’ முறையில்...

இந்த பகுதியில் உள்ள குப்பை மேட்டை அகற்றி ஏரியை சீரமைக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதன்படி இந்த ஏரியில் கொட்டப்பட்ட குப்பைகளை ரூ.7 கோடி செலவில் ‘பயோ மைனிங்’ முறையில் அகற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான பணிகள் இன்னும் 2 மாத காலத்தில் தொடங்கப்படும் என தெரிகிறது.

இது தவிர, தமிழ்நாடு நகர் புற வளர்ச்சி திட்ட நிதியின் கீழ் ரூ.14 கோடியே 98 லட்சம் செலவில் பல்லாவரம் பெரிய ஏரி மற்றும் கீழ்கட்டளை ஏரி புனரமைக்கப்பட உள்ளது.

இதற்காக டெண்டர் விடப்பட்டு, அடுத்த மாதம் (ஏப்ரல்) இறுதியில் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ள இந்த ஏரிகளில் புனரமைப்பு பணிகளை பல்லாவரம் நகராட்சி மூலம் செய்ய அரசு அனுமதி அளித்து உள்ளது.

ஏரிகளை தூர் வாரி கரைகள் நீரியல் தன்மை மாறாமல் பலப்படுத்தப்படுகிறது. நீர் பிடிப்புபகுதிகளில் இருந்துவரும் மழைநீரை ஏரிகளுக்குள் கொண்டு வருவதற்கு ஏதுவாக திருகு மறை கதவுகளுடன் கூடிய உள்வாங்கிகள் அமைக்கப்பட உள்ளன. கழிவுநீர் கலப்பு இன்றி முழுமையாக சுத்தமான நீரினை மட்டுமே ஏரியில் விட திட்டமிடப்பட்டுள்ளது.

நிரந்தரதீர்வு

முதற்கட்டமாக கீழ்கட்டளை ஏரியின் புனரமைப்பு பணிகள் தொடங்க உள்ளன. கீழ்கட்டளை ஏரியில் கரைகள் பலப்படுத்தப்பட்டு, அந்த கரை பகுதியை நடைபயிற்சி செய்யும் இடமாக மாற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கீழ்கட்டளை ஏரியின் புனரமைப்புபணிகள் முடிந்த பிறகு பல்லாவரம் பெரிய ஏரி தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தும் பணிகள் நடைபெறவுள்ளது. இதற்கிடையே, கீழ்கட்டளை ஏரி புனரமைப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் போதே பல்லாவரம் பெரிய ஏரிகுப்பைகளை ‘பயோ மைனிங்’ முறையில் அப்புறப்படுத்தும் பணிகள் தொடங்கிவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

பல்லாவரம் பெரிய ஏரி பகுதியில் உள்ள குப்பைகிடங்கு அகற்றப்படுவதன் மூலம் பல்லாவரம் நகராட்சி குரோம்பேட்டை ராதாநகர், கணபதிபுரம் பகுதி மக்களுக்கு 30 ஆண்டுகளுக்கு மேலாக சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வந்த பிரச்சினைக்கு நிரந்தரதீர்வு காணப்படும்.

பல்லாவரம், குரோம்பேட்டை பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நடவடிக்கை எடுத்து உள்ள பல்லாவரம் நகராட்சிக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்து உள்ளனர். அதே சமயம் காலம் தாழ்த்தாமல், அறிவிக்கப்பட்ட காலக் கட்டத்துக்குள்ளேயே பணிகளை செய்து முடிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Next Story