திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டம்
100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று மாற்றுத்திறனாளிகள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 100 நாள் வேலை திட்டத்தில் தங்களுக்குப் பணி வழங்கக்கோரி இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.
இதில் திருவள்ளூர், பூண்டி, கடம்பத்தூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பெண்கள் உள்பட 100–க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இது பற்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது:–
பணி வழங்க மறுப்புஎங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கப்படவில்லை. இது குறித்து நாங்கள் அங்குள்ள பணி மேற்பார்வையாளரிடம் கேட்டபோது அவர்கள் உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்ய அனுமதிக்க முடியாது என மறுப்பு தெரிவிக்கின்றனர்.
எங்களில் பலருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்படவில்லை. இது பற்றி நாங்கள் பலமுறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர். எங்கள் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணவே கலெக்டர் அலுவலகம் வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தைஅப்போது அங்கு வந்த அதிகாரிகள், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அவர்களின் கோரிக்கைகள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
அதை ஏற்று மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் இது தொடர்பான கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர், அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.