மாதேஸ்வரன் மலைக்கு தண்ணீர் எடுக்க காவிரியின் குறுக்கே மணல்மூட்டைகள் அடுக்கி தடுப்பு


மாதேஸ்வரன் மலைக்கு தண்ணீர் எடுக்க காவிரியின் குறுக்கே மணல்மூட்டைகள் அடுக்கி தடுப்பு
x
தினத்தந்தி 1 March 2017 4:45 AM IST (Updated: 28 Feb 2017 10:56 PM IST)
t-max-icont-min-icon

மாதேஸ்வரன் மலைக்கு தண்ணீர் எடுக்க காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி கர்நாடகா தடுப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொளத்தூர்,

நீர்வரத்து குறைந்தது

பருவமழை பொய்த்ததாலும், காவிரி நடுவர்மன்ற இடைக்கால தீர்ப்பின்படி தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய தண்ணீரை கர்நாடகா வழங்காததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் மேட்டூர் அணை மூலம் பாசன வசதி பெறும் திருச்சி, தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

மழையின்மை காரணமாக தமிழக–கர்நாடக எல்லையில் ஓடும் காவிரியின் துணை நதியான பாலாறும் வறண்டு விட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு மிகவும் குறைந்து விட்டது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்யும் மழையால் கடந்த சில மாதங்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சராசரியாக வினாடிக்கு 300 கனஅடி வீதம் வந்து கொண்டு இருந்தது.

மணல் மூட்டைகள் மூலம் தடுப்பு

இந்த நிலையில் தமிழக–கர்நாடக எல்லையில் உள்ள அடிப்பாலாறு என்ற இடத்தின் அருகில் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகாவில் உள்ள மாதேஸ்வரன் மலைக்கோவில் நிர்வாகம் ஏராளமான மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், தண்ணீர் எடுக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே கால்வாய் வெட்டி மேட்டூர் அணைக்கு வரும் நீரை ராட்சத மின்மோட்டார் மூலம் உறிஞ்சி எடுக்கும் பணியில் கர்நாடகா ஈடுபட்டுள்ளது.

இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து வரலாற்றில் இல்லாத வகையில் வினாடிக்கு 11 கனஅடி முதல் வினாடிக்கு 26 கனஅடி வரை மிகக்குறைந்து விட்டது. இதனால் மேட்டூர் அணையின் மூலம் குடிநீர் வசதி பெறும் சேலம், ஈரோடு, நாமக்கல், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதேநிலை நீடித்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து என்பதே கேள்விக்குறியாகி விடும்.

நீர்மட்டம் 31.41 அடி

நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 31.41 அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.


Next Story