அழகப்பா பல்கலைக்கழகத்தில் மாணவர் திறமை வங்கி துணைவேந்தர் சுப்பையா தகவல்


அழகப்பா பல்கலைக்கழகத்தில் மாணவர் திறமை வங்கி துணைவேந்தர் சுப்பையா தகவல்
x
தினத்தந்தி 25 Feb 2017 4:15 AM IST (Updated: 24 Feb 2017 11:36 PM IST)
t-max-icont-min-icon

அழகப்பா பல்கலைக்கழகத்தில் மாணவர் திறமை வங்கி தொடங்கப்பட உள்ளது என்று துணைவேந்தர் சுப்பையா கூறினார்.

காரைக்குடி,

புத்தாக்க பயிற்சி

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தன்னார்வ பயிலும் வட்டம், கல்லூரி வளர்ச்சி குழுமம், இளைஞர் நலன் மற்றும் ஆளுமைபடுத்தல் மையம் ஆகியவை சார்பில் ‘பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வளங்களை அறிதல்‘ என்ற தலைப்பில் புத்தாக்க பயிற்சி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழா பல்கலைக்கழக கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது. விழாவிற்கு துணைவேந்தர் சுப்பையா தலைமை தாங்கினார். இந்த புத்தாக்க பயிற்சி வருகிற 28–ந்தேதி வரை நடைபெற உள்ளது.

மாணவர் திறமை வங்கி

விழாவில் துணைவேந்தர் சுப்பையா பேசும்போது கூறியதாவது:– இந்த புத்தாக்க பயிற்சியானது பல்கலைக்கழகத்தை பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும், பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்பு வசதிகள், ஆய்வகங்கள், நூலக வசதிகள் மற்றும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பல்வேறு வசதிகள் பற்றியும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். மாணவர்கள் தங்களுக்கென ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அந்த இலக்கின் மீது நம்பிக்கை வைத்து, தொடர் முயற்சி செய்து அதில் வெற்றி பெற வேண்டும். இந்த புத்தாக்க பயிற்சியில் பங்குபெற்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை கொண்டு ‘மாணவர் திறமை வங்கி‘ உருவாக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அறிவியல் புல முதன்மையர் மணிசங்கர், பல்கலைக்கழகத்தில் உள்ள அறிவியல் துறைகள் குறித்தும், ஆராய்ச்சிகள் குறித்தும், அறிவியல் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார். விழாவில் கல்லூரி வளர்ச்சி குழும முதன்மையர் ராஜா மோகன், திறன் மேம்பாட்டு நிறுவன இயக்குனர் தர்மலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மேலும் இதில் தன்னார்வ பயிலும் வட்ட இயக்குனர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story