சிக்கன் கீமா பிரியாணி
ருசியான சிக்கன் கீமா பிரியாணி தயார் செய்யும் முறை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - 5 கப்
சிக்கன் கைமா(கொத்துக்கறி) - 800 கிராம்
வெங்காயம் - 6 (பொடிதாக நறுக்கியது - 4, நீளமாக நறுக்கியது - 2)
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது - 4 டேபிள் ஸ்பூன்
தயிர் - ¼ கப்
பச்சை மிளகாய் - 6
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 2 டேபிள் ஸ்பூன்
சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மசாலா பொருட்கள் (பட்டை, லவங்கம், ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை, அன்னாசி பூ) - தேவையான அளவு
சாஹிஜீரா - 1 டீஸ்பூன்
குங்குமப்பூ - தேவையான அளவு
புதினா - 1 கட்டு
கொத்தமல்லித்தழை - 1 கட்டு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
நீளமாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக பொரித்து எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சிக்கன் கைமாவுடன், பாதி அளவு இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், சீரகத் தூள் மற்றும் தனியா தூள், கரம் மசாலா சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை 30 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.
வாணலியில் 5 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பட்டை, லவங்கம், ஏலக்காய், அன்னாசி பூ, பிரிஞ்சி இலை, சாஹிஜீரா சேர்த்து வதக்கவும்.
பின்பு பொடிதாக நறுக்கிய வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
பின்னர் மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்து பொடிதாக நறுக்கிய தக்காளியை அத்துடன் சேர்த்து வதக்கியதும், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்துக் கிளறவும். அதில் ஊற வைத்த சிக்கன் மற்றும் தயிர் சேர்த்து கிளறி சில வினாடிகள் கழித்து, பொடிதாக நறுக்கிய புதினா, கொத்தமல்லித் தழை, பச்சை மிளகாய், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
மிதமான தீயில் வைத்து பாத்திரத்தை மூடி 15 முதல் 20 நிமிடம் வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் சுத்தம் செய்த பாஸ்மதி அரிசி, பிரிஞ்சி இலை, அன்னாசி பூ, ஏலக்காய், சிறிதளவு சாஹிஜீரா, ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அரை வேக்காட்டில் வேக வைத்து எடுக்கவும்.
சிக்கன் வெந்த பிறகு, ஒரு பாத்திரத்தில் சிக்கன் கலவை ஒரு அடுக்கு, வேக வைத்த அரிசி ஒரு அடுக்கு என்ற விகிதத்தில் வைக்க வேண்டும். இறுதியாக, குங்குமப்பூ, சிறிதளவு தண்ணீர், கொத்தமல்லித்தழை, வறுத்த வெங்காயம் கலந்து, குறைந்த தீயில் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால், சுவையான ‘சிக்கன் கீமா பிரியாணி’ தயார்.
Related Tags :
Next Story