ஸ்கூல் கேம்பஸ் : சினிமா விமர்சனம்


ஸ்கூல் கேம்பஸ் : சினிமா விமர்சனம்
x
நடிகர்: ராஜ் கமல், கஜேஷ் நாகேஷ் நடிகை: காயத்ரி, கிர்த்தி  டைரக்ஷன்: ராமநாராயணா இசை: தேவா ஒளிப்பதிவு : அருள் வின்சன்

அனைத்து மாணவர்களுக்கும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத ஒரே மொழி ஒரே கல்வி வேண்டும் என்ற கருவை மையமாக வைத்து சமூக அக்கறையோடு படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் ராமநாராயணா.

ஒரே இடத்தில் பயிலும் சி.பி.எஸ்.சி மாணவர் கஜேஷ், மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர் ராஜ்கமல் இருவரும் ஈகோவால் மோதிக்கொள்கின்றனர். அந்த பள்ளிகளை நடத்தும் ராமநாராயணா மருத்துவம் பயில ஆர்வப்படும் மாணவர்களிடம் பணம் கறக்கும் நோக்கோடு நீட் பயிற்சி மையம் தொடங்க திட்டமிடுகிறார். இதற்கு ராஜ் கமல் எதிர்ப்பு தெரிவிப்பதோடு அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மொழி, ஒரே கல்வி கொள்கையை அமல்படுத்த குரல் எழுப்புகிறார். அவரது நல்ல நோக்கத்தை உணர்ந்து இரு பள்ளி மாணவர்களும் ஆதரவு தெரிவிக்கிறார்கள். இதனால் தனது தொழில் பாதிப்பதை உணர்ந்து ராஜ்கமலை தீர்த்து கட்ட ஆட்களை ஏவுகிறார் பள்ளி நிர்வாகி. அந்த ஆபத்தில் இருந்து ராஜ்கமல் தப்பினாரா? அவரது ஒரே கல்வி கொள்கை லட்சியம் நிறைவேறியதா? என்பது மீதி கதை..

உயர்வான சமூக பார்வை, மாணவர்கள் நலனில் அக்கறை, அரவணைப்பு என்று நல்மாணாக்கர் கதாபாத்திரத்திரத்துக்கு தேவையான நடிப்பை வழங்கி இருக்கிறார் ராஜ் கமல். பகை காட்டும் மாணவர் உயிரை காப்பாற்றி நெகிழ வைக்கிறார்.

கோபக்கார மாணவனாக 'ஸ்கோர்' செய்கிறார் கஜேஷ். அவரது பார்வையும் உடல்மொழியும் எதிர்மறை கதாபாத்திரத்துக்கு உதவுகிறது. மிடுக்கான பேச்சு, மந்திரியை பணிய வைக்கும் தோரணை, மிரட்டும் தொணி என்று அனைத்து வகையிலும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்துகிறார் பள்ளி நிர்வாகியாக வரும் ராமநாராயணா.

பள்ளி முதல்வர்களாக வரும் மதன்பாப், டெல்லி கணேஷ் இருவரும் அனுபவ நடிப்பால் மனதில் நிற்கிறார்கள். நாயகிகளாக வரும் காயத்ரி, கிர்த்தி ஆகியோரும் கதாபாத்திரங்களில் நிறைவு. சில காட்சிகள் நாடகத்தனமாய் நகர்வது பலகீனம்.

தேவாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஒளிப்பதிவாளர் அருள் வின்சன் கேமரா பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை சிறப்பாக படம்பிடித்துள்ளது.

அனைத்து மாணவர்களுக்கும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத ஒரே மொழி ஒரே கல்வி வேண்டும் என்ற கருவை மையமாக வைத்து சமூக அக்கறையோடு படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் ராமநாராயணா. மாணவர்களின் நட்பு, காதல், மோதல் என்று ஜாலி கலாட்டாக்களால் கதையை சுவாரஸ்யப்படுத்தியும் இருக்கிறார்.


Next Story