பிரபாஸின் 'ஆதிபுருஷ்' படம் தாமதமாவது ஏன்.?. காரணத்தை பகிர்ந்த இயக்குனர்..


பிரபாஸின் ஆதிபுருஷ் படம் தாமதமாவது ஏன்.?. காரணத்தை பகிர்ந்த இயக்குனர்..
x

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் ‘ஆதிபுருஷ்’ இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் நடித்துள்ள படம் 'ஆதிபுருஷ்'. ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார்.

மேலும், கிரித்தி சனோன், சைப் அலி கான், சன்னி சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். டி சீரிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

டீசரில் இடம் பெற்றுள்ள காட்சிகள் வீடியோ கேம் போல் இருப்பதாகவும் ராவணனை தவறாக சித்தரித்து இருப்பதாகவும் பலர் கண்டித்தனர். சமீபத்தில், இந்த படத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய காட்சிகளை சரி செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதால் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ஆதிபுருஷ் திரைப்படம் 2023-ஆம் ஆண்டு ஜுன் 16-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து இயக்குனர் ஓம் ராவத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பார்வையாளர்களுக்கு காட்சிபூர்வமான முழு அனுபவம் தருவதற்கு எங்கள் படக்குழுவிற்கு கூடுதல் அவகாசம் தரவேண்டியிருக்கிறது. இந்தியா பெருமைப்படக் கூடிய படத்தை வழங்குவது எங்கள் கடமை. உங்களின் அன்பும் ஆதரவும் எங்களை தொடர்ந்து இயக்க வைக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story