கமர்சியல் படங்களால் கதாநாயகிக்கான முக்கியத்துவம் போய்விட்டது- ரேகா வருத்தம்


கமர்சியல் படங்களால் கதாநாயகிக்கான முக்கியத்துவம் போய்விட்டது- ரேகா வருத்தம்
x

நடிகை ரேகா நடித்துள்ள திரைப்படம் 'மிரியம்மா'. இப்படத்தை இயக்குனரான மாலதி நாராயண் தயாரித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகியுள்ள முதல் திரைப்படம் 'மிரியம்மா'. இதில் மூத்த நடிகை ரேகா கதையின் நாயகியாக நடித்துள்ளார். இவருடன் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, இந்த திரைப்படத்தில் இடம் பெறும் பாடல்களுக்கு ஏ. ஆர். ரெஹைனா இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை கமல் கவனிக்க, கலை இயக்க பணிகளை 'யாத்திசை' புகழ் ரஞ்சித் மேற்கொண்டுள்ளார். பெண்மணிகளை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை 72 ஃபிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குனரான மாலதி நாராயண் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகை ரேகா பேசியதாவது, ஒரு படத்தில் நாம் நடித்த கதாபாத்திரத்தின் பெயரைச் சொல்லி நம்மை யாராவது அழைக்கும் போது மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கும். தமிழில் ஜெனிபர் டீச்சர், ரஞ்சனி, உமா போன்ற கதாபாத்திரங்கள் எனக்கு அப்படி அமைந்தது. அது போல் மலையாளத்தில் ராணி, மீனுக்குட்டி போன்ற கதாபாத்திரங்கள் பேர் சொல்வது போல் அமைந்தது. அந்த வரிசையில் கண்டிப்பாக இந்த மிரியம்மாவும் இடம்பெறும் என்று நம்புகிறேன்.

செல்போனில் இயக்குனர் கதை சொல்லும் போதே என் மனதில் பட்டாம்பூச்சி பறக்கத் துவங்கிவிட்டது. இந்த கதாபாத்திரத்தில் ஏதோவொன்று இருக்கிறது, விட்டுவிடாதே என்று என் மனம் குதூகலித்தது. இந்தப் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குனருக்கு என் நன்றிகள். இப்படத்தில் நான் எழிலுக்கு தாயாக நடித்திருக்கிறேன். எங்களுக்குள் அந்த பாண்டிங் வந்தால் தான் காட்சிகள் இயல்பாகத் தெரியும். ஆனால் நான் பல படங்களில் நடித்த சீனியர் என்பதால் எழில் ஆரம்பத்தில் விலகியே இருந்தான்.. பின்னர் நான் அவனை "டேய் இங்க வாடா" என்று உரிமையாக அழைத்துப் பேசத் துவங்கியதும் எழில் இயல்பாகிவிட்டான். காட்சிகளும் அருமையாக வந்திருக்கின்றது. நான் நடித்த சில கதாபாத்திரங்கள் சற்று திமிர்பிடித்த கதாபாத்திரங்கள் என்பதால் என்னைப் பார்ப்பதற்கு அப்படித் தெரியும். ஆனால் நான் உண்மையில் அப்படி இல்லை.

என்னைப் போன்ற நடிகைகளுக்கு இப்பொழுது பணம் ஒரு பொருட்டல்ல, நாங்கள் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து எங்களை நிரூபிக்க விரும்புகிறோம். நாற்பது வயது ஆகிவிட்டாலே கறிவேப்பிலையை தூக்கி எறிவது போல் எங்களை எறிந்துவிடுகிறார்கள். கமர்சியல் திரைப்படங்களால் கதாநாயகிக்கான முக்கியத்துவம் போய் விட்டது. எல்லோரும் என்னை ஃபாரினில் சென்று செட்டில் ஆகிவிட்டீர்களா..? என்று கேட்கிறார்கள். நான் எப்பொழுதுமே சென்னையில் இருக்கவே விரும்புகிறேன்.. நிறைய திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறேன்… உயிருள்ள வரை நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது என் ஆசை. சின்ன பட்ஜெட்டில் தொடங்கிய இப்படம் முடியும் போது பெரிய பட்ஜெட் திரைப்படமாக மாறிவிட்டது. இப்படத்திற்கு நீங்கள் ஆதரவு தந்து படத்தை வெற்றிப்படமாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று பேசினார்.


Next Story