அல்லு அர்ஜுனை பாராட்டிய கலெக்டர்
தந்தையை இழந்த கேரள மாணவியின் 4 ஆண்டு படிப்பு செலவு மற்றும் விடுதி செலவுகளை ஏற்ற அல்லு அர்ஜுனை ஆலப்புழா மாவட்ட கலெக்டர் வி.ஆர்.கிருஷ்ண தேஜா தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து அல்லு அர்ஜுனுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் அல்லு அர்ஜுன், புஷ்பா படத்தில் நடித்த பிறகு இந்தியா முழுவதும் கவனம் பெற்றார். தற்போது புஷ்பா 2-ம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அல்லு அர்ஜுன் நர்சிங் படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு உதவி செய்து பலரது பாராட்டை பெற்றுள்ளார். 12-ம் வகுப்பில் 92 சதவீதம் மதிப்பெண் பெற்ற கேரள மாணவி ஒருவரின் தந்தை கடந்த வருடம் கொரோனாவால் இறந்து போனார். இதனால் கல்வி கட்டணம் செலுத்த பணமில்லாமல் அந்த மாணவியால் படிப்பை தொடர முடியவில்லை. இதையடுத்து அந்த மாணவியின் 4 ஆண்டு படிப்பு செலவு மற்றும் விடுதி செலவுகளை அல்லு அர்ஜுன் ஏற்றார். இந்த தகவலை ஆலப்புழா மாவட்ட கலெக்டர் வி.ஆர்.கிருஷ்ண தேஜா தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து அல்லு அர்ஜுனுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தார். அல்லு அர்ஜுன் சேவையை வாழ்த்தி பலரும் வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.