கரகாட்டக்காரி கனகாவின் காணாமல் போன வீடு
நாதசுவரக் கலையை கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம், தில்லானா மோகனாம்பாள். அதேப் பாணியில் கரகக் கலையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் கரகாட்டக்காரன்.
1989-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ந் தேதி அந்தப் படம் வெளியானது.
ராமராஜன், கனகா நடித்திருந்தனர். பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளான, கனகா அறிமுகமும் இந்தப் படத்தில்தான். கங்கை அமரன் எழுதிய கதை. கரகம் ஆடும் ஓர் இளம் பெண்ணுக்கும், கரகாட்டக் கலைஞருக்கும் இடையே மலரும் காதலைக் கிராமியமாகச் சொல்லியிருப்பார். பாடல்களும் அவரே. இளையராஜாவின் கிராமிய இசையில் அனைத்தும் இனிமை. அதன் பாடல்கள் ஒலிக்காத கிராமங்கள் இல்லை. கவுண்டமணி, செந்திலின் கலக்கல் காமெடியுடன் பட்டிதொட்டி எல்லாம் படம் பட்டயைக் கிளப்பியது. ராமராஜனை உச்சத்திற்கு உயர்த்தியது. மதுரை நாட்டியா தியேட்டரில் ஓராண்டையும் தாண்டி ஓடியது. அதை கொண்டாடும் விதத்தில் ஒருநாள் படம் பார்க்கவந்த ஒவ்வொரு ரசிகருக்கும் அரைக் கிலோ இனிப்பு வழங்கப்பட்டது.
கரகாட்டக்காரன் படப்பிடிப்பு முழுவதும் மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில்தான் நடந்தது.
அந்தப் பழைய நினைவலைகளை பிள்ளையார்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி, இதோ நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
"எங்கள் கிராமம் பிள்ளையார்நத்தம், அதைச்சுற்றியுள்ள அம்பலத்தாடி, கல்லணை, பொதும்பு ஆகிய கிராமங்களில்தான் கரகாட்டக்காரன் படம் முழுவதும் எடுக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் நான் 10-ம் வகுப்பு படித்தேன். எங்கள் கிராமத்தில் மட்டும் சுமார் ஒரு மாதம் இந்த படப்பிடிப்பு நடந்தது. ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் என அனைத்து நடிகர்களும் நாள்தோறும் எங்கள் கிராமத்திற்கு வந்துவிடுவார்கள். படப்பிடிப்பு முடிந்தவுடன் மதுரைக்குச் சென்று விடுதிகளில் தங்கி இருப்பார்கள். ஒரு மாத காலமும் அவர்கள் எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்களாகவே வாழ்ந்தனர். படப்பிடிப்பு இடைவேளையின்போது எங்கள் ஊரில் உள்ள பெட்டிக்கடையிலும், டீக்கடையிலும் அமர்ந்து ஜாலியாக பேசிக்கொண்டே இருப்பார்கள்.
அந்தப் படத்தில் கனகா வசித்து வந்த வீடு இங்கேதான் இருந்தது. தற்போது அந்தவீடு இடிக்கப்பட்டு காலிமனையாகக் கிடக்கிறது. கவுண்டமணி, செந்தில் மற்றும் கூட்டாளிகள் காரில் செல்லும்போது கார் பழுதாகிவிடும். அதை தள்ளிக்கொண்டு அவர்கள் செல்லும்போது ஒருவர் சைக்கிளில், பழைய இரும்பு, பித்தளைக்கு பேரீச்சம்பழம் என கூவிக்கொண்டே வருவார். அவருடன் கவுண்டமணி தகராறு செய்வார். அந்த சீன் இங்குதான் எடுக்கப்பட்டது. வாழைப்பழ காமெடி சீன்களும் இங்குதான் படமாக்கப்பட்டன. அந்த நாளை இப்போது நினைத்தாலும் இனிமையாகவே இருக்கிறது" என்றார்.