ஜானி டெப் உடன் காதலா? - ஆம்பர் ஹேர்ட்க்கு எதிரான வழக்கில் புகழ்பெற்ற வழக்கறிஞர் கேமிலி விளக்கம்
ஆம்பருக்கு எதிரான வழக்கில் ஜானி டெப்பிற்கு ஆதரவாக வாதாடி உலக அளவில் கவனம் பெற்றார் கேமிலி வாஸ்குவேஸ்.
வாஷிங்டன்,
"பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படங்கள் கேப்டன் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் நடித்து உலக அளவில் பிரபலமானவர் நடிகர் ஜானி டெப். இவர் லோரி அனி அலிசன் என்ற பெண் ஒப்பனை கலைஞரை 1983-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
பின்னர் 2 ஆண்டுகள் கழித்து 1985-ம் ஆண்டு இந்த தம்பதி பிரிந்து விவகாரத்து பெற்றனர். இதையடுத்து, 2015-ம் ஆண்டு நடிகை ஆம்பர் ஹேர்ட்டை நடிகர் ஜானி டெப் திருமணம் செய்துகொண்டார். ஜானி தன்னை விட 25 வயது குறைவாக இருந்த ஆம்பர்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண உறவு 2 ஆண்டுகளே நீடித்தது.
2019-ம் ஆண்டு பிரபல அமெரிக்க பத்திரிக்கையான 'தி வாஷிங்டன் போஸ்ட்'-ல் ஜானி டெப்பின் முன்னாள் மனைவி ஆம்பர் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அதில், தனது முன்னாள் கணவரான டெப் தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகவும், தான் குடும்ப வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அந்த கட்டுரையில் ஆம்பர் தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டுகள் உலக அளவில் பேசுபொருளானது.
ஆம்பரின் குற்றசாட்டுகளை மறுத்த ஜானி டெப், தனது முன்னாள் மனைவி மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகள் அனைத்தும் வெர்ஜீனியா கோர்ட்டில் 2019-ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் இறுதி இறுதி கட்ட விசாரணை கடந்த 2 மாதங்களாக உலகமே உற்று நோக்கும் வகையில் நடைபெற்று வந்தது. ஜானி டெப்பிற்கு எதிராக அவதூறு பரப்பும் நோக்கத்துடன் ஆம்பர் செயல்பட்டது உறுதியானதாக கோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்தது. அவதூறு பரப்பும் வகையில் பொய்யாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தற்காக ஆம்பர் தனது முன்னாள் கணவர் ஜானிக்கு இழப்பீடு வழங்கவும் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.
அதே நேரத்தில் கடந்த இரண்டு மாதங்களாக சமூக வலைத்தளங்களில் மக்களால் அதிகம் பேசப்பட்ட நபர்களுள் ஒருவர் கேமிலி வாஸ்குவேஸ். ஆம்பருக்கு எதிரான வழக்கில் ஜானி டெப்பிற்கு ஆதரவாக வாதாடி உலக அளவில் கவனம் பெற்றார் கேமிலி வாஸ்குவேஸ். வழக்கின் முக்கிய தருணங்களில் அசாதாரண முறையில் வாதாடி வழக்கை ஜானி டெப்பிற்கு சாதகமாக்கினார்.
கேமிலி வாஸ்குவேஸ் நடிகர் ஜானி டெப்-பை காதலிப்பதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. இந்த நிலையில் தற்போது அதற்கு கேமிலி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து கேமிலி கூறும் போது, "ஜானி எனது நண்பர். நான் நான்கரை ஆண்டுகளாக அவரை அறிவேன். ஆனால் இதுபோன்ற விஷயங்களை கேட்கும் போது ஏமாற்றம் அளிக்கிறது. ஒரு வழக்கறிஞராக என்னுடைய வாடிக்கையாளருடன் காதல் செய்வது நெறிமுறையற்றது. இது துரதிர்ஷ்டவசமானது மற்றும் ஏமாற்றமளிக்கிறது, ஆனால் அதே நேரத்தில் இது குறித்த செய்திகளை கேட்ட போது நான் ஆச்சரியப்பட்டேன் என்று சொல்ல முடியாது" என்றார்.
தனக்கு ஏற்கனவே ஒரு ஆண் நண்பர் இருப்பதாகவும் கேமிலி வாஸ்குவேஸ் தெரிவித்தார்.