கன்னட நடிகரை மணக்கிறார் நடிகை ஹரிப்பிரியாவுக்கு 26-ந் தேதி திருமணம்
கன்னட நடிகரும், பாடகருமான வசிஷ்ட சிம்ஹாவுக்கும், நடிகை ஹரிப்பிரியாவுக்கும் வருகிற 26-ந் தேதி மைசூருவில் உள்ள ஸ்ரீ கணபதி சச்சிதானந்தா ஆசிரமத்தில் திருமணம் நடக்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல கன்னட நடிகை ஹரிப்பிரியா. இவர் தமிழில் கனகவேல் காக்க, வல்லக்கோட்டை, முரண், நான் மிருகமாய் மாற உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஹரிப்பிரியாவுக்கு தற்போது 30 வயது ஆகிறது. இந்த நிலையில் கன்னட நடிகரும், பாடகருமான வசிஷ்ட சிம்ஹாவுக்கும், ஹரிப்பிரியாவுக்கும் காதல் மலர்ந்தது.
இவர்கள் காதலுக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து சமீபத்தில் பெங்களூருவில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனாலும் திருமண தேதியை முடிவு செய்து வெளியிடவில்லை. இந்த நிலையில் வருகிற 26-ந் தேதி மைசூருவில் உள்ள ஸ்ரீ கணபதி சச்சிதானந்தா ஆசிரமத்தில் திருமணம் நடக்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரிப்பிரியாவும், வசிஷ்ட சிம்ஹாவும் ஸ்ரீகணபதி ஆசிரமத்துக்கு சென்று மடாதிபதியை சந்தித்து பேசினர். பின்னர் திருமண தேதியை உறுதி செய்து அறிவித்தனர். இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.